யுக முடிவு நாள் மற்றும் தர்மம்

யுக முடிவு நாள் மற்றும் தர்மம்

(பைபிள் மற்றும் குர்ஆன்)

 

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)

முஸ்லிம்களாகிய நாம் அருள்மறை குர்ஆனை படிக்கிறோம் ஆனால் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை உணர்வதில்லை இதோ அல்லாஹ் கீழ்க்கண்ட வார்த்தைகளால் நம்மை சீர்படுத்த நாடுகிறான்

 (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 2:4-5)

இந்த வசனத்தில் சிந்திப்பவர்களுக்கு சில பொக்கிஷங்கள் மறைக்கப் பட்டுள்ளது. ஆத்மீக ஞானத்தில் தீட்சை என்று அங்குமிங்கும் அலைந்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் மாறாக அல்லாஹ் கூறும் அல்குர்ஆனையும் அதற்கு முன் அருளப்பட்ட வேதத்தையும் பற்றி அறிவிக்கிறான்.

அல்லாஹ் பொய் கூறமாட்டான் எனவே அல்குர்ஆன் வாயிலாக எந்த ஒரு செய்தியை மக்களுக்கு போதிக்கிறானோ அந்த செய்தியில் பல முக்கியமான அம்சங்கள் காணப்படுகின்றன. இதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட வேதத்தை முஸ்லிம்களாகிய நாம் நம்புவோம் என்று சாட்சி கூறுகிறான்.

ஒரு சில மார்க்க அறிஞர்களும், மதரஸா ஹஜரத்துக்களும் நமக்கு சொல்லும் பாடம் என்ன? அல்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது அவை கலப்படம் செய்யப்பட்டு பொய்யாக திரித்து எழுதப்பட்டன என்பதுதான். இதன் மூலம் நம் மூலையை அவர்கள் சிந்திக்க விடாமல் ஆக்கிவிட்டதுடன் அல்லாஹ் சிந்திக்கத்தூண்டும் புத்தக ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள விடாமல் நம்மை முட்டாள்களாக்கி விட்டனர்.

ஒரு சில மார்க்க அறிஞர்களும், மதரஸா ஹஜரத்துக்களும் நமக்கு போதித்த அல்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன அல்லது அவை கலப்படம் செய்யப்பட்டு பொய்யாக திரித்து எழுதப்பட்டன என்ற சிந்தாந்தங்கள் உண்மைதான் மறுக்க இயலாது இருந்தாலும் குர்ஆனுக்கு முன் உள்ள வேத வசனங்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை மாறாக நல்ல வசனங்களுடன் இட்டுக்கட்டிய சில வசனங்கள் இணைக்கப் பட்டுள்ளதால் நல்ல வசனஙகள் நம்மால் எளிதில் அடையாளம் கண்டுக் கொள்ள இயலவில்லை!

நம் சிந்தனைகளை சிதறடிக்கும் இப்படிப்பட்ட சில மார்க்க அறிஞர்கள் மற்றும் மதரஸா ஹஜரத்துக்களின் வார்த்தைகளை சற்று ஒதுக்கிட்டு குர்ஆனுக்கு முன் உள்ள வேதத்தை ஆராய்ச்சி செய்து பார்க்கலாம் வாருங்கள்.

குர்ஆனுக்கு முன் உள்ள வேதங்கள் என்று பார்த்தால் பைபிள்தான் ஆதாரமாக நமக்கு இன்று காணப்படுகிறது இந்த பைபில் இரண்டு பிரிவுகளாக உள்ளது!

அ) பைபிள் பழைய ஏற்பாடு

ஆ) பைபிள் புதிய ஏற்பாடு

குர்ஆனுக்கு முன் உள்ள வேதங்களின் அடிப்படையில் பழைய ஏற்பாட்டை நாம் சற்று ஆராய்ச்சி செய்து பார்ப்போம்! வாருங்கள் இதோ பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் கர்த்தர் என்பது படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை குறித்து பேசப்படும் சொல்லாகும் (கர்த்தர் – அல்லாஹ்) என்ற புரிந்துக் கொண்டால் கீழ்க்கண்ட வசனம் கூறும் அல்லாஹ்வின் கோபத்தையும் அதனால் ஏற்படும் பேரழிவையும் சற்று நிதானமாக சிந்தக்கலாம்!

 பார்! கர்த்தருடைய விஷேச நாள் வருகிறது! இது பயங்கரமான நாள். தேவன் மிகவும் கோபம் அடைந்து, நாட்டினை அழிப்பார். பாவம் செய்த அனைவரையும் தேவன் அழித்துப்போடுவார். வானம் இருட்டாகும், சூரியன், சந்திரன், நட்சத்திறங்கள் எல்லாம் ஒளி வீசாது! (பழைய ஏற்பாடு ஏசாயா 13:9)

அன்பிற்கினய சகோதர சகோதரிகளே இதோ மேற்கண்ட பழைய ஏற்பாட்டின் ஏசாயா 13:9த்தை அல்குர்ஆன் எவ்வாறு உண்மைப் படுத்துகிறது என்பதை தெளிவாக்குகிறோம்!

பின்னர் கியாமத் நாளில் அவர்களை இழிவுபடுத்துவான். “நீங்கள் எனக்கு இணையாகக் கருதி தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே?” என்று அவன் கேட்பான். “இன்று இழிவும், கேடும் (ஏகஇறைவனை) மறுப்போர்க்கேஎன்று கல்வி வழங்கப்பட்டோர் கூறுவார்கள். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 16:27)

வானம்பிளந்து விடும். அன்று அது உறுதியற்றதாக இருக்கும். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 69:16)

அந்நாளில் வானம் உருக்கிய செம்பு போல் ஆகும். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 70:8)

சூரியன் சுருட்டப்படும்போது,  நட்சத்திரங்கள் உதிரும்போது, மலைகள் பெயர்க்கப்படும்போது, கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும்போது, விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது, கடல்கள் தீ மூட்டப்படும்போது, உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும்போது, என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, ஏடுகள் விரிக்கப்படும்போது, வானம் அகற்றப்படும்போது, நரகம் கொளுத்தப்படும்போது, சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும்போது, ஒருவன், தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 81:14)

அன்பிற்கினய சகோதர சகோதரிகளே இதோ பழைய ஏற்பாட்டின் ஏசாயா 13:9த்தை அல்குர்ஆன் எவ்வாறு உண்மைப் படுத்துகிறது என்பதை அறிந்தீர்களா? இதை நாம் சிந்தித்துணர்ந்தால் அல்லாஹ்வுக்கு மாறு செய்வோமா?

இப்போது பைபிளின் புதிய ஏற்பாட்டின் பக்கம் வருவோம்

இந்த புதிய ஏற்பாடு என்பது இயேசுவின் காலத்திற்கு பின்பு அவருக்கு பின்வந்த மனிதர்களால் அங்குமிங்குமாக இருந்த செய்திகளைச் சேகரித்து அதில் சற்று தங்களுடைய கருத்துக்களை பதித்தது உண்மைதான் எனினும் நல்ல செய்திகளை குர்ஆனுக்கு ஒத்துப் போகின்ற செய்திகளை இவர்களால் அழிக்க இயலவில்லை அதைநாம் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறோம் இதோ நம் பார்வையில் குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் துள்ளியமான வகையில் பொருந்தக்கூடிய புதிய ஏற்பாட்டின் சில வசனங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம் இதோ!

  நீங்கள் நற்செயல்களைச் செய்யும் பொழுது அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காண வேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் பரவோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது! (புதிய ஏற்பாடு மத்தேயு 6:1)

 நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும் பொழுது, நீங்கள் ஊதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல் நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவிப்பார்கள். அவர்கள யுத ஆலயங்களிலும் தெருக்களிலும் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும் பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள். உங்கள் உதவி இரகசியமாகச் செய்யப்பட வேண்டும். உங்கள் பிதாவாகிய தேவன் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். எனவே அவர் உங்களுக்க வெகுமதியளிப்பார். (புதிய ஏற்பாடு மத்தேயு 6:2 முதல் 4 வரை)

மேற்கண்ட புதிய ஏற்பாட்டின் வசனங்கள் இதோ அல்குர்ஆனில் உள்ளது போன்றே மிகச் சரியாக பொருந்துகிறது என்பதை சற்றே கவனமாக சிந்தித்துப் படியுங்கள்!

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 2:264)

நபிமொழி

சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (ஆதாரம் : நஸயி, திர்மிதி)

 தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்” (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 2:271)

யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 2:271)

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது. (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 13:22)

ஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) “கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்” என்று நீர் கூறுவீராக. (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 14:31)

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ – தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ – நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 35:29)

(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 2:268)

பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 2:273)

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 2:274)

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று கூறுகிறான். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 2:261)

அன்புச் சகோதர, சகோதரர்களே மேற்கண்ட வசனங்கள் உங்களுக்கு படிப்பினையாக இருக்கிறதே இது சிந்திக்கக் கூடியதாக அமைய வில்லையா?

மறைவான விஷயங்களில் அற்ப வாழ்வைத் தொலைத்து நிற்கும் நம் சகோதர சகோதரிகள் இதுபோன்ற அறிய செய்திகளை சிந்தித்து மாற்றுமதத்தவர்களுக்கு தாவா செய்தால் கிருஸ்தவர்கள் மற்றும் இணைவைக்கும் முஸ்லிம்கள் நல்வழி பெற முயற்சிக்கலாமே இதோ மீண்டும் முதலில் எடுத்துக்கூறிய அருள்மறை குர்ஆனின் வசனத்தை மீண்டும் ஒருமுறை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றோம் இதை மீண்டும் சிந்தித்து பொறுமையாக படித்து நல்லுணர்வு பெறுவீர்களாக!

 (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 2:4-5)

மேலே உள்ள வசனத்தை சிந்திப்பவர்களுக்கு சில பொக்கிஷங்கள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கூறியது உண்மை என்று நம்பினால் என் இறைவனை புகழ்வீராக!

அதிகமாக வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் உங்கள் நேரத்தை வீணான காரியங்களில் ஈடுபட்டு சீரழிவதைவிட இதுபோன்ற அழகிய பணிக்கு உங்களையும் அர்பணித்து நமக்கு பின்வரக்கூடிய சமுதாயத்திற்கு நல்ல பிரகாசமான எதிர்காலத்தையும் சிந்திக்கும் ஆற்றலையும் ஏற்படுத்த முயல்வோமா?

முஸ்லிம்களாகிய நாம் என்னத்தான் திருத்தப்பட்ட பைபிளின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டை அறிந்துக் கொண்டாலும் அதில் உள்ள உண்மையான கருத்துக்களை குர்ஆனுடன் ஆராய்ந்துப் பார்த்து இறுதி வேதமான குர்ஆனுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் இதோ கண்ணியமிக்க நபிகளார் (ஸல்) அவர்களின் அழகிய அறிவுரையை கேளுங்கள்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப்பட்டதையும் மற்றும் மூஸாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கம், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். (குர்ஆன் 02:136) (புகாரி 7542)

முஸ்லிம்களாகிய நாம் இறுதி வேதமான அருள்மறை குர்ஆன் மற்றும் அதற்கு முன் உள்ள வேதங்களை பகுத்தறிந்து அதில் உள்ள நல்ல வசனங்களை தெளிவாக யூதர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு விளக்கிக்கூறி அவர்களிடம் தெளிவான முறையில் தாவா செய்ய வேண்டும் இதோ அல்லாஹ்வின் அறிவுரையை சற்று பொறுமையாக சிந்தித்து அறிந்துக் கொள்ளுங்கள்!

 நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்” என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். “(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?” என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள், பூமி, அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது. (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 5:18)

வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன. (இறுதி வேதம் அருள்மறை குர்ஆன் 5:15)

 அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அல்லாஹ் இந்த வசனத்தையும் நம்மை சிந்திக்க தூண்டுகிறான், முஹம்மது உங்களிடம் வந்துவிட்டார் என்னும் போது இறுதித்தூதுத்துவம் முடிந்துவிட்டது என்பதாகவும் அவர் மூலமாக குர்ஆன் என்னும் வேதம் அருளப்பட்டதாகவும் சிந்திக்க வேண்டும்!

நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார் என்பதிலிருந்து முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றக்கூடியவர்கள் அழகான முறையில் அருள்மறை குர்ஆன் வசனங்களை இட்டுக்கட்டிய பொய்யான பழைய புதிய ஏற்பாட்டுக்களின் வசனங்களோடு மோதவிட்டு உண்மையை விளக்கிக்கூற வேண்டும் என்பதாக கருதுங்கள்!

பலவற்றை அலட்சியம் செய்துவிடுவார் என்பதிலிருந்து சந்தேகத்திடமான பைபிள் பழைய புதிய ஏற்பாட்டு வசனங்களை தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதாக சிந்திக்க தூண்டுகிறது.

அல்லாஹ்விடம் உங்களுக்கு ஒளியும் தெளிவான வேதமும் வந்துவிட்டன என்பதிலிருந்து குர்ஆன்தான் இறுதி வேதம் அதைத்தவிர மற்ற வேதங்கள் எதுவாக இருந்தாலும் குர்ஆனுக்குத்தான் முன்னுரிமை வழங்கி அதை கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறான்

அல்லாஹ் பொய் கூறமாட்டான் எனவே அல்குர்ஆன் வாயிலாக எந்த ஒரு செய்தியை மக்களுக்கு போதிக்கிறானோ அந்த செய்தியில் பல முக்கியமான அம்சங்கள் காணப்படுகின்றன என்பதை இன்று உங்கள் முன் சமர்பித்துவிட்டோம் இப்பணிக்கு நேரம் ஒதுக்கி நற்சிந்தனைகளை உங்கள் முன் எத்திவைக்க உதவிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

அல்ஹம்துலில்லாஹ்!

சுபுஹானல்லாஹ்!

அல்லாஹூ அக்பர்!

அன்புடன்

சிராஜ் அப்துல்லாஹ்