பைபிளும் குர்ஆனும்

விருத்த சேதனம்+

(ஆண்களுக்கு கத்னா)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

அல்குர்ஆன் தமக்கு முன் உள்ள வேதத்தை உண்மைப்படுத்தும் என்று சூளுரைக்கிறது இதோ இந்த நாம் இதை தெளிவாக்குகிறோம் உங்களில் நல்லறிவு பெறுவோர் சிந்திக்கட்டும்!

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையை எண்ணிப்பாருங்கள்! என் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்! உங்கள் உடன்படிக்கையை நான் நிறைவேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள்! (அருள்மறை குர்ஆன் 2:40)

உங்களிடம் உள்ள(வேதத்)தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளிய(குர்ஆன் எனும் வேதத்)தை நம்புங்கள்! இதை மறுப்போரில் முதலாமவராக ஆகாதீர்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! (அருள்மறை குர்ஆன் 2:41)

விருத்த சேதனம் பற்றி பைபிள் கூறுவதும் இஸ்லாம் நடைமுறைப்படுத்துவதும் பற்றி அறிவோம்! வாருங்கள்

உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்த சேதனம் செய்துக் கொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்கு கீழ்ப்படிகிறீர்கள் என்பதாக அடையாளம்! (பழைய ஏற்பாடு ஆதியாகமம் 17:11)

ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்த சேதனம் செய்துவிட வேண்டும். அதுபோலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கும் விருத்த சேதனம் செய்ய வேண்டும். (பழைய ஏற்பாடு ஆதியாகமம் 17:12)

எனவே உங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்களும் விருத்தசேதனம் செய்யபட்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் அடிமைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும் (பழைய ஏற்பாடு ஆதியாகமம் 17:13)

இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான், ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான் என்றார் (பழைய ஏற்பாடு ஆதியாகமம் 17:14)

மேற்கண்ட பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள செய்தியை இஸ்லாம் உண்மைபடுத்துகிறது

“(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் ‘கதூம்’ (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3356, 6298, அஹ்மத்).

“விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரீ 5889, 5891, 6297, முஸ்லிம் 377, 378, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், முஅத்தா மாலிக்)

அல்குர்ஆன் தமக்கு உள்ள வேதத்தை உண்மைப் படுத்தியதை உங்களில் நல்லறிவு பெறுவோர் சிந்தித்தீர்களா? வாருங்கள் உங்கள் சத்திய மார்க்கத்தை அறிந்துக்கொண்டு உள்ளே முழுமையாக நுழையுங்கள்!

‘காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களையும் செய்து, சகித்துக்கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர! (இவர்கள் நஷ்டவாளிகள் அல்ல)’ (அருள்மறை குர்ஆன் 103 : 1-3)

“இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கு அறிந்தோர் நீங்களா? அல்லாஹ்வா?” என்று கேட்பீராக! அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை விட அநீதி இழைத்தவன் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (அருள்மறை குர்ஆன் 2:141)

“அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்” என்று கூறுங்கள்! (அருள்மறை குர்ஆன் 2:136)

‘விசுவாசிகளே! நீங்கள் தீனுல் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்து விடுங்கள்.’ (அருள்மறை குர்ஆன் 2 : 208)